நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. டெல்லி நிர்பயா சம்பவத்திற்கு பிறகு கடும் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. இத்தகைய குற்றங்களில் ஈடு படு வோருக்கு இரக்கம் காட்டாமல் அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து தமிழகத்தில் சிறுமிகள் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகி வருகின்ற அவலம் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கோவை மற்றும் தென்காசியில் நடந்த அத்தகைய சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சீரநாய்க்கன் பாளையத்தில் கடந்தாண்டு நவம்பர் 26ஆம் தேதி தான் இத்தகைய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுமி தனது 17வது பிறந்த நாளை காதலனுடன் கொண்டாட பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அங்கு 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சுற்றி வளைத்தது. காதலனை அடித்து உதைத்துவிட்டு அச்சிறுமியை மறைவான இடத்திற்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு 6 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை படம்பிடித்தும் வைத்துக் கொண்டனர்.
பின்னர் இருவரையும் விரட்டி அடித்துள்ளனர். இதையடுத்து காதலனின் வீட்டிற்கு சென்று அங்கேயே சிறுமி தங்கியுள்ளார். அடுத்த நாள் மாலை தனது வீட்டிற்கு திரும்பி நடந்த விஷயங்களை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
உடனே அவர்கள் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இது பற்றி நடத்திய தீவிர விசாரணையில் குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் சீரநாய்க்கன் பாளையத்தை சேர்ந்த ராகுல்(21), பிரகாஷ் (22), கார்த்திகேயன்(28), நாராயணமூர்த்தி (30) ஆகியோர் ஆவர்.
இவர்கள் அனைவரும் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதைப்போலவே, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள ஊத்துமலை காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமத்தில்தான் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மும்பையில் வசித்துவந்த குடும்பம் சில மாதங்களுக்கு முன்னரே தங்கள் சொந்த கிராமத்திற்கு வந்துள்னர். அந்த குடும்பத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கிராமத்தில் உள்ள மலைக் கோயிலுக்கு தனியாகச் சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் அந்த சிறுமியை காட்டுக்குள் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கினர்.பின்னர் சிறுமியை ஊரின் பிரதான சாலையில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கதறி அழுது இந்த கொடூர சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஊத்துமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் இந்த புகார் ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியபோலீஸார் அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி (26), மாரிசெல்வம் (27), முத்துவேல் (25), முருகன் (25) ஆகிய நான்கு பேர் இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களில் கருப்பசாமி, மாரி செல்வம், முத்துவேல் ஆகியோரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள முருகனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய வன்புணர்வுகளுக்கான தண்டனைகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே நல்லோர்களின் எண்ணம். சட்டங்கள் கடுமையாக்கப்படுமா?